சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாற்றத்தால், மாநிலம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று (ஜூலை 17) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், நாளையும் கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் நிலையில், சில இடங்களில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல், தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வரை 40 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் கடலில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
