காஸாவில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் இஸ்ரேல் ஆதரவால் இயங்கும் ஜிஹெச்எஃப் (Gaza Humanitarian Foundation) மனிதாபிமான உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசல், மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான் யூனிஸ் நகரில் நடைபெற்ற இந்த துயர சம்பவத்தில் 19 பேர் நெரிசலில் மிதிபட்டும், ஒருவர் குத்தப்பட்டு  மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜிஹெச்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நெரிசலை ஹமாஸ் இயக்கம் திடீரென ஏற்படுத்திய பீதியே காரணமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான துல்லிய ஆதாரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

மேலும், காஸா சுகாதார அமைச்சகம் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாவது, ஜிஹெச்எஃப் ஊழியர்கள் கண்ணீர் புகை பயன்படுத்தியதாலேயே மக்கள் பதற்றத்தில் ஓடி நெரிசல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் குண்டுவீச்சு மற்றும் முற்றுகைகளால் பசித்தால் உணவில்லாத நிலைக்கு தள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேல் சீரான நிவாரண பொருள் விநியோகத்திற்கு அனுமதி அளித்திருந்தாலும், உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு வருபவர்களே இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டால் பலமாகக் கொல்லப்படுகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மே மாதம் முதல் 875 பாலஸ்தீனர்கள் உணவுக்காக வந்து உயிரிழந்துள்ளனர், இதில் மட்டும் 674 பேர் ஜிஹெச்எஃப் மையங்களுக்கு அருகில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், மனிதாபிமான சாயலில் செயல்படும் மையங்களில் கூட நல்லிணக்கமின்றி, மக்கள் உயிரிழக்க நேரிடுவது மகிழ்ச்சி அளிக்காத ஒன்று. உணவுக்காக போராடும் மக்கள் மீதான தாக்குதலும், நிர்வாகக் கோளாறும் சேர்ந்து இது மாதிரியான புதிய சோகங்களை உருவாக்கி மனதை நொறுக்குகின்றன ..