உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் தால் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு (இன்று) செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. மேலும் 6 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முவானி மாவட்டம் சுனி கிராமத்தில் இருந்து போக்டா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த ‘மேக்ஸ்’ ஜீப் ஒன்று, தால் பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. ஜீப்பில் பயணித்த 14 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பெண்கள், 3 ஆண்கள் உள்ளனர் என மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி பூபேந்திர சிங் மஹர் தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
