திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த 11 மாத பெண் குழந்தையின் உடல், யாருக்கும் தெரியாமல் தென்னந்தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணம் குறித்து நம்பத்தகாத தகவல்கள் பரவி வருவதால், தற்போது இது தொடர்பாக காவல் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்திலி அருகே உள்ள பக்கரிக்கான் மட்டம் பகுதியில் வசித்து வருகிறார் ராஜ்குமார். இவரும், அவரது மனைவி முத்துலட்சுமியும் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நான்காவது குழந்தையான கயல்விழி என்ற 11 மாத பெண் குழந்தை கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த நிலத்திலுள்ள தென்னந்தோப்பில் அடக்கம் செய்துள்ளார் ராஜ்குமார்.

இந்த தகவல் கந்திலி வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவிக்கு கிடைத்ததும், அவர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை ஆரம்பித்துள்ளனர். வேலூர் அரசு மருத்துவமனை உடற்கூறு நிபுணர் டாக்டர் , திருப்பத்தூர் வட்டாட்சியர்  முன்னிலையில் குழந்தையின் உடலை மீட்டுப் பரிசோதனை மேற்கொண்டு உள்ளார். குழந்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குழந்தை இயற்கையாகவே உயிரிழந்ததா, அல்லது  பிற காரணங்களால் இருந்ததா  என்பதை உறுதிபடுத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ‘நான்கு பெண் குழந்தைகள் என்பதாலா குழந்தையை கொல்லப்பட்டதா ?’ என்ற சந்தேகமும் எழுந்த நிலையில், அந்த பெற்றோர்களிடம் விசாரணை மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உண்மை நிலவரம் விசாரணைக்கு பின் வெளிவரும்.