தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.சி சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் அருண்பாண்டி(30)- ஸ்டெல்லா(27) தம்பதியினர். அருண்பாண்டி ஆலங்குளத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிரதீஷா(5), தேசிகா(4), தர்ஷிகா(2) என 3 மகள்களும், 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஸ்டெல்லாவின் தாயார் வங்கியில் கடன் பெற்று அதன் மூலம் ஒரு வீடு வாங்கினார். ஆனால் அந்த வீட்டை ஸ்டெல்லாவுக்கு கொடுத்துள்ளார். இவரின் தாயாருக்கு ஊருக்கு வடக்கில் உள்ள காட்டுப் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு இருந்துள்ளது. அங்கு அவர் ஆடு மாடுகளை பராமரித்து வளர்த்து வந்துள்ளார்.

சில நேரங்களில் தனது தாய்க்கு உதவி செய்யும் எண்ணத்தில் ஸ்டெல்லாவும் ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு கடனை அடைத்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்டெல்லாவின் போனுக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் ஆன்லைன் மூலமாக சூதாட்டம் விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என வந்ததை  நம்பி ஸ்டெல்லா அந்த லிங்கை ஓபன் செய்துள்ளார். அந்த வகையில் கடந்த ஜீன் மாதம் முதலாக ஸ்டெல்லா ஆன்லைனில் சூதாட்டம் விளையாட தொடங்கியுள்ளார். முதலில்ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் சிறிய தொகை ஸ்டெல்லா வங்கி கணக்கிற்கு வந்தது.

இந்த பணத்தின் மூலம் வீட்டுக் கடனை அடைத்து விடலாம் என்ற ஆசையில் தனக்கு தெரிந்தவரிடம் ரூபாய் 2 லட்சம் வரை கடன் வாங்கி அதனை சூதாட்டத்தில் முதலீடு செலுத்தியுள்ளார். ஆனால் அதில் ஸ்டெல்லாவிற்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. பின்பு கடன் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக பணத்தை திருப்பி கேட்க தொடங்கினர்.

இதனால் ஸ்டெல்லாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஸ்டெல்லா கடந்த 10-ம் தேதி வழக்கம் போல தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் குழந்தைகளை விட்டுவிட்டு மாட்டு தொழுவத்திற்கு சென்று அங்கு வயலுக்கு தெளிக்க கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

அப்போது ஸ்டெல்லாவை காணவில்லை என அவரது தாயார் வீட்டின் பின்னால் சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லாவின் தாய் அக்கம் பக்கதினர் உதவியுடன் ஸ்டெல்லாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 குழந்தைகளும் சிறு வயதிலேயே தன் தாயே இழந்து தவிக்கும் காட்சி காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.