சென்னை தாம்பரம் சேலையூர் அருகே வெங்கம்பாக்கம் அகரம்தென் பகுதியில், தனியார் கட்டிட நிறுவனத்திற்காக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 பேர் சமைத்து சாப்பிட்ட கோழிக்கறி விஷமாய் மாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 வயதான ஐதர் சக், 38 வயதான அலிஉஷேன் ஆகியோர் உட்பட நால்வர் வெங்கம்பாக்கம் பகுதியில் தங்கி கட்டிடம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள கடையில் இருந்து கோழிக்கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கினர். ஆனால் சில மணி நேரங்களில் அவர்களுக்கு திடீரென வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் உருவாகியது.
இதையடுத்து, அதிகாலை நேரத்தில் ஐதர் சக், அலிஉஷேன் ஆகியோர் கடுமையான வலியால் துடித்தனர். உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஐதர் சக் உயிரிழந்தார். மற்றொருவரான அலிஉஷேன் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, நன்கு சமைக்கப்படாத கோழிக்கறியில் சால்மோனெல்லா, காம்பிலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் இயல்பாகவே இருக்கும். அவை சரியான முறையில் சமைக்கப்படவில்லையெனில் அல்லது நீண்ட நேரம் வெளியே வைத்திருந்தால், பாக்டீரியாக்கள் பெருகி உணவு விஷமாக மாறும்.
இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் கோழிக்கறி கெட்டுப்போனதாலா, அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தொங்கவைத்திருந்த, பசுமைத் தன்மை இல்லாத சிக்கனை வாங்கி சமைப்பதிலோ, அல்லது மீண்டும் சூடாக்கும்போது முறையாக சமைக்காமல்விட்டாலோ, அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க, உணவுப் பொருட்களை வாங்கும் தருணத்திலேயே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
