தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்து அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் லாக்கப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேசிய நிலையில் இன்று முதல் முறையாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளார். அவர் கையில் சாரி வேண்டாம் நீதிதான் வேண்டுமென்ற பதாகையை வைத்துள்ள நிலையில் கருப்பு சட்டை போட்டு போராட்ட களத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் அதிக வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக தற்போது அடுத்தடுத்து தொண்டர்கள் மயங்கி விடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 5 தொண்டர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மயக்கம் அடையும் தொண்டர்களை உடனடியாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார்கள்.