நம் அண்டை நாடுகளில் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள சீனா பல்வேறு உத்திகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக, கடன் வழங்கும் மூலம் அந்த நாடுகளை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. இதன் கீழ் தற்போது வங்கதேசம் சீனாவின் கடன் வலையில் சிக்கி இந்தியாவுக்கு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.

முதலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சீனா, அந்த நாடுகளை தனது தாக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. பின்பு கொரோனா காலத்துக்குப் பிறகு பொருளாதார மோசமடைந்த பாகிஸ்தான், சர்வதேச நிதி நிறுவனம் (IMF) சார்ந்த கடனுதவியால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீனாவிடம் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த பாகிஸ்தானுக்கு உலக வங்கி அளித்த கணிப்புப்படி 40 ஆண்டுகள் ஆகும். இது வரை சீனாவின் பிடியிலேயே அந்த நாடு இருக்கும்.

இதேபோல், சீனாவின் கடன் உத்தி தற்போது வங்கதேசத்தையும் கட்டியிழுத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியா நட்புடன் செயல்பட்ட வந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி மாணவர் போராட்டத்தால் முடிவுக்கு வந்தது. அவர் பதவி விலகிய பிறகு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். பின்னர், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சீனாவிடம் வங்கதேசம் 2023 வரை 51,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இம்மாண்டு மட்டும் மார்ச் மாதத்தில் 17,500 கோடி ரூபாய் சீனாவிடம் பெறப்பட்டுள்ளது. இந்த கடனை 30 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தவேண்டும். இதன் மூலம், வங்கதேசமும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என சொல்லப்படுகின்றது.

இதற்கிடையில், சீனா – பாகிஸ்தான் – வங்கதேசம் மூன்றும் இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகின்றன. கடந்த ஜூன் 19-ம் தேதி சீனாவின் குன்மிங் பகுதியில் இந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், சார்க் அமைப்பின் செயலிழப்பை மனதில் கொண்டு புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது.

மேலும், இந்த கூட்டணியில் மேற்கு ஆசிய நாடான துருக்கியும் தற்போது இணைந்துள்ளது. இந்தியா நடத்திய “ஆப்பரேஷன் சிந்தூர் ” நடவடிக்கையின் போது பாகிஸ்தான் மற்றும் துருக்கி இணைந்து ட்ரோன் ஆதரவுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வங்கதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் தொடர்பாக துருக்கியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறைந்த செலவில் ஆயுத உற்பத்தி ஆலையை வங்கதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, சீனா – பாகிஸ்தான் – வங்கதேசம் – துருக்கி என நான்கு நாடுகளும் இந்தியாவை நோக்கி ஒன்றிணையும் அபாயத்தை உருவாக்குகிறது என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாற்றங்களை இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் திட்டமிட்ட நடவடிக்கைகள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய செல்வாக்குக்கு ஒரு பெரும் சவாலை உருவாக்கும் நிலையில் உள்ளது.