நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (35). இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடினார்.

இதன் பேரில், விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் தீபா (30) என்பவருடன் சிவசண்முகத்திற்கு கடந்த ஜூலை 7ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமகள் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தீபா, சிவசண்முகத்துடன் அவரது ஊரான வடகரையாத்தூர் சென்றார்.

அதன் மறுநாளே, ஜூலை 8ஆம் தேதி, சிவசண்முகத்தின் அக்கா மலர்கொடியின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற நிலையில், அங்கிருந்து தீபா திடீரென காணாமல் போனார். தீவிரமாக தேடியும், தீபாவையும், புரோக்கர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் கைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தத் திடீர் தலைமறைவால் பெரிதும் மனவேதனைக்கு உள்ளான சிவசண்முகம், ஜூலை 10ஆம் தேதி சாயங்காலம், தனது அக்காள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மலர்கொடி சிவசண்முகத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

ஆனால் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தீபா, திருமணத்திற்கு அணிந்த பட்டுப்புடவையும், 9 பவுன் தங்கத் தாலியையும் எடுத்துக் கொண்டு தலைமறைவானது தெரியவந்தது. தீபா மற்றும் திருமணத்தில் தொடர்புடைய 6 புரோக்கர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் செய்து மோசடி செய்திருக்கக்கூடிய தீபா கல்யாண மோசடிக் கும்பலின் முக்கிய உறுப்பினரா? என்பது தொடர்பாகவும் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.