கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர், நடிகை கௌதமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். மேலும் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு, திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் அதிசய பிறவிகள்.

ஆனால் நடிகர் விஜய் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா? என்பது கூற முடியும். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எழுச்சிப் பயணம் மக்கள் பிரச்சனைகளை பேசும் பயணமாக மாறி உள்ளது. அந்தப் பயணத்தில் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் தேடிச் சென்று கேட்கப்படுவதால் அது ஒரு எழுச்சி பயணமாகவும் மாறி உள்ளது.

தற்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை எல்லாம் எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசி வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பேசுவதே இல்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்பது உறுதி. வரும் தேர்தலில் அதிமுக அடையும் வெற்றி தான் தமிழக மக்களின் வெற்றியாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.