
கனடா நாட்டின் மனிடோபா மாகாணத்தில் உள்ள ஸ்டெயின்பாக் (Steinbach) என்ற பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், இந்தியாவின் கேரள மாநிலம் திருப்பூணித்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஸ்ரீஹரி சுகேஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் (24) ஆகியோர் பைலட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் சிறப்பாக பயிற்சி பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி சுயமாக விமானம் ஓட்டும் நேரடி பயிற்சியில் பங்கேற்றனர்.
அன்று, வின்னிபெக் நகரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் தங்களது தனிப்பட்ட சிறிய விமானங்களை இயக்கி தரையிறக்க முயன்றனர். அந்தச் சந்தர்ப்பத்தில், சுமார் 400 மீட்டர் (1,300 அடி) உயரத்தில் இரு விமானங்களும் எதிர்பாரா விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோதியதன் காரணமாக இரு விமானங்களும் தீப்பற்றிக் கொண்டன. இந்த பயங்கரமான விபத்தில் ஸ்ரீஹரி சுகேஷும், சவானா மே ராய்ஸும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த செய்தி கனடா மற்றும் இந்தியா அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board of Canada) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விமான பயிற்சி மையத்திலும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘
இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.