மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், வியாழக்கிழமை நேர்ந்த சோகமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் ஒருவரை வேன் ஓட்டுநர் ஒருவர் வேகமாக மோதியதோடு, அரை கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளார்.

இந்தக் கொடூரமான செயலில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தேவாஸ் நகரின் ஏபி சாலை பகுதியில் உள்ள சாமுண்டா வளாகம் அருகே நிகழ்ந்துள்ளது. இதனை பார்த்த மக்கள்  ஓட்டுநரை தடுக்க முயன்ற போதும், வேன் ஓட்டுநர் தப்பிச் சென்றார். இந்த வீடியோ காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பொதுமக்கள் தெரிவித்ததாவது, தேவாஸ் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிக்னல்கள் முறையாக செயல்படவில்லை என்றும், வாகன ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் பொறுப்பின்றி வாகனங்களை இயக்குவது வழக்கமாகிவிட்டது எனும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக, உஜ்ஜைன் சாலை, சிவில் லைன் சந்திப்பு போன்ற இடங்களில் சிக்னல்கள் பல நாட்களாக பழுதாக உள்ளன என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு முறை பாதுகாப்பற்ற சாலைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் தேவை குறித்து அலட்சியத்தைக் கேள்வி எழுப்புகிறது. தற்போது தேவாஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரைக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.