
பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட் (வயது 32), ‘எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
அவரின் தனி உதவியாளராக வேலையாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டி (வயது 32) என்ற பெண், ஆலியாவின் நிதி மற்றும் ஆவணங்கள் தொடர்பான பணிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, ஆலியாவின் கையெழுத்தை போலி போட்டு, போக்கற் ரசீதுகள் மூலம் சுமார் 77 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி விவகாரம் குறித்து ஆலியாவின் தாயாரான சோனி ரஸ்தான், மும்பை ஜுஹூ போலீசில் புகார் அளித்ததையடுத்து, குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் வழக்குப்பதிவின் பின்னர், வேதிகா தலைமறைவானார். ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்த வேதிகா, பெங்களூரில் இருந்தபோது, மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது வேதிகா ஷெட்டியை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பிரபல நடிகையின் நெருங்கிய ஊழியரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருப்பது மீதான நம்பிக்கையை சிதைக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் பலர் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.