பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் கயாகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவா சௌக் பகுதியில் அமைந்துள்ள பீகார் கிராம வங்கியில் திங்கள்கிழமை நடந்த திடீர் கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குற்றவாளிகள் வங்கிக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த பாதுகாவலர், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணயக்கைதிகளாக பிடித்தனர். அவர்கள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்த பின்னர், வேகமாக வங்கியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் அதிவேகமாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிராமப்புற எஸ்பி ராஜேஷ் குமார் பிரபாகர் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், குற்றவாளிகள் மூவரும் முகமூடி அணிந்த நிலையில் வங்கிக்குள் நுழைந்து பாதுகாவலரை முதலில் கட்டுப்படுத்தும் காட்சிகள் தெளிவாக உள்ளன. பிறகு வாடிக்கையாளர்களை பயமுறுத்தி பணம் எடுத்துச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய பகல் வங்கி கொள்ளை வியக்க வைக்கும் வகையில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பில் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.