பெருநகரமாக வளர்ந்த பங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயர்ந்த ஆட்டோ கட்டணங்கள் மக்களுக்கு நிரந்தர சிக்கலாகவே உள்ளது. இந்நிலையில், அந்நகரில் வசிக்கும் ஆதிதி ஸ்ரீவாஸ்தவா என்ற பெண், தானே அனுபவித்த ஆட்டோ பயண கட்டணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைத்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படங்களில், நேரடியாகக் கொண்டு சென்ற ஆட்டோவின் மீட்டர் கட்டணம் ₹39 என இருக்க, அதே தூரத்திற்கு (சுமார் 2.6 கி.மீ.) ஆன்லைன் ஆப்புகள் மூலம் கணிக்கப்பட்ட கட்டணம் ₹172.45 என காணப்படுகிறது. இது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது.

அவசரத்தில் ஆட்டோக்களை ஆன்லைன் மூலமாகவே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், பயணிகளுக்கு ஒரு கடனை, வேறொரு கடனைத் தேடி செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது என நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். “இந்த கட்டண வேறுபாடு வெறும் ஏமாற்றம் அல்ல, இது ஒரு விதமான சுரண்டல்தான்,” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “சமீப நாட்களில் உபர் மீட்டருக்கு சமமான கட்டணத்தைக் காட்டினாலும், டிரைவர்கள் ரைடு ஏற்கவே மாட்டார்கள்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஊழல், ஆட்டோ மாஃபியா மற்றும் மாநில அரசின் மோசமான போக்குவரத்து கொள்கைகள் தான் இந்த நிலைக்கு காரணம்” என்றும், “பைக் டாக்ஸி மற்றும் பிற நவீன போக்குவரத்து முறைகளுக்கு தடைகள் விதிப்பதால் பயணிகள் தேர்வின்றி ஆப்புகளை நம்பவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பங்களூருவில் போக்குவரத்து கட்டணங்களில் பாரபட்சம் தீராத குறையாகவே தொடர்கிறது.