உத்திரபிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 12 வயதான தலித் சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர் கடந்த வருடம் மார்ச் மாதம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு சிறுமி முக்கிய சாட்சியாக இருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் சாட்சி கூறுவதாக இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சிறுமி சாட்சி சொல்லக்கூடாது என்பதற்காக பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து அந்த சிறுமியை  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தங்கள் மகளை அந்தக் கோலத்தில் கண்டு கலங்கியதோடு பின்னர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களை கைது செய்வதாக உறுதி கொடுத்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.