நாடு முழுவதும் வருகிற ஜூலை 9-ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையை பாதிக்கக்கூடிய அளவில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கான காரணமாக, மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தில், தமிழகத்தில் செயல்படும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு சிக்கல், விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட 17 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல். இதன் காரணமாக, அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேவை தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்ததாவது, “நீண்ட காலமாக பரப்புரை செய்யப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் போராட்டம் தீவிரமாகும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த வேலைநிறுத்தம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எதிராக ஒற்றுமையாக கூடி தொழிலாளர்கள் பதிவு செய்யும் முக்கிய எதிர்ப்பு குரலாக பார்க்கப்படுகிறது.