மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, சம்பள மோசடி வழக்கு வெடித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அந்த இளைஞர், பயிற்சி பெற செல்லாமல் வீட்டிலேயே இருந்து 12 ஆண்டுகளாக ரூ.28 லட்சத்திற்கு மேற்பட்ட பணத்தை சம்பளமாக பெற்றுள்ளான். அதிர்ச்சியாக, அவர் ஒருநாளும் காவல் நிலையத்தில் பணியாற்றவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த இளைஞர், பாபால் போலீஸ் லைனில் நியமனம் செய்யப்பட்டிருந்தார். அப்போது, போலீஸ் பயிற்சி பெற சாகர் போலீஸ் அகாடமிக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் நேராக தனது வீட்டுக்கே சென்று விட்டார். பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்ததுடன், தவறான தகவல்களை அஞ்சல் மூலமாக அதிகாரிகளுக்கு அனுப்பி, தானும் பயிற்சி மையத்தில்தான் இருக்கிறேன் என நிரூபிக்க முயன்றுள்ளார். இதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டதால், அவரது வங்கி கணக்கில் மாதந்தோறும் சம்பளம் வரிசையாக செலுத்தப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு, போலீசாரின் பணிச்சார்பு உயர்வுக்கான நடவடிக்கையின் போது  இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழ்களும் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை ஏற்ற போலீசார், அவர் பணிக்கே வராமல் பெற்ற சம்பளத்தை திரும்ப செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது வரை அவர் ரூ.1.50 லட்சம் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகை அவரது மாத சம்பளத்தில் இருந்து வழக்கம்போல் பிடித்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த இளைஞர் பாபால் போலீஸ் லைனில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு காவலர், தன் பொறுப்பை இவ்வாறு தவறாக பயன்படுத்தி, துறைமேல் நம்பிக்கையை தகர்த்தது குறித்து பலரும் அதிர்ச்சி மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.