உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், ராணுவ மருத்துவராக பணியாற்றும் மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா, அப்பெண்ணுக்கு அவசரமாக ஹேர் கிளிப் மற்றும் பாக்கெட் கத்தி ஆகியவற்றை பயன்படுத்தி குழந்தையை பிரசவிக்கச் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டை பெற்றுள்ளது.

இது குறித்து வட மத்திய ரயில்வே பிரிவின் மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ் குமார் சிங் கூறுகையில், “பன்வெல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயிலில் கடும் வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஜான்சி ரயில் நிலையத்தில் அவசரமாக இறக்கினர்.

அந்த நேரத்தில் அங்கு இருப்பது போலிருந்த பெண் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ராணுவ அதிகாரி உடனே உதவிகரமாக செயல்பட்டனர். அதே நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த மேஜர் ரோஹித் பச்வாலா, அந்த பெண்ணை சக்கர நாற்காலியில் கொண்டுவரப்படுவதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் தன் கடமையை உணர்ந்து அவசர மருத்துவ உதவியளித்தார்” என்றார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ரோஹித் கூறுகையில், “முழுமையான மருத்துவ வசதிகள் இல்லாத சூழ்நிலையில், என்னிடம் இருந்த ஹேர் கிளிப் மூலம் தொப்புள் கொடியை கட்டி, பாக்கெட் கத்தியை நன்கு சுத்தம் செய்து வெட்டி குழந்தையை வெளியேற்றினேன். பிறகு, ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலம் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

நான் ஒரு மருத்துவராக இருப்பதற்கான உண்மையான அர்த்தம் இதுதான் என்பதை உணர்ந்தேன். இது ஒரு கடவுளின் ஆசீர்வாதம் தான்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, நெட்டிசன்கள் “மனிதநேயத்தின் சின்னம் மேஜர் ரோஹித்!”, “இது தான் உண்மையான ஹீரோவின் செயல்!”, “இரண்டு உயிர்களுக்கு தன்னலமின்றி உதவிய தேசத்தின் வீரனை வணங்குகிறோம்” என மெச்சி வருகின்றனர்.

இந்த நிகழ்வு, எந்த நேரமும் கடமையை மறக்காத இந்திய ராணுவத்தினரின் மனப்பாங்கை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.