சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது பெரியம்மாவுடனும், நந்தினி அமர்நாத்துடனும் தங்கி இருந்தனர்.

சில நாட்கள் கழித்து அமர்நாத் உஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் நந்தினியை வீட்டு வேலை செய்யுமாறு உஷா தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனை அறிந்தும் அமர்நாத் உஷாவை எதுவும் கூறாமல் இருந்துள்ளார். தாய் தன்னுடன் இல்லாத நிலையில், தந்தையும் சித்தியின் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருப்பதால் நந்தினி மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் பாத்திரங்களை தேய்ப்பது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் பார்த்து வந்தார்.

ஒரு நாள் துணி துவைக்காவிட்டாலும் “துணி துவைக்கவில்லை. சித்தி என்ன சொல்ல போகிறாரோ” என தோழிகளிடம் நந்தினி புலம்பி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் நந்தினி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக உஷா மற்றும் அமர்நாத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.