கர்நாடகாவில், வரி செலுத்தாமல் சொகுசு ‘பெராரி’ காரை ஓட்டி வந்த நபர், அதிகாரிகளிடம் சிக்கியதுடன், சாலைவாரியாக ரூ.1.42 கோடி அபராதம் செலுத்தி தனது காரை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ஜெயநகர் மற்றும் லால்பாக் பகுதிகளில், மஹாராஷ்டிரா மாநில பதிவு பெற்ற ‘பெராரி எஸ்.எப்.90 ஸ்ட்ராடேல்’ என்ற 7.50 கோடி மதிப்புடைய சொகுசு கார் தொடர்ந்து சென்று வந்ததை போக்குவரத்து போலீசார் கவனித்தனர். பின்னர் அந்த காரை வழிமறித்து விசாரித்ததில், கர்நாடகாவில் ஓட்டப்படும் வேற்று மாநில வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு ஆண்டைத் தாண்டியும், 18 மாதங்களுக்கு மேலாக சாலை வரி செலுத்தப்படவில்லை என  தெரியவந்தது.

இதையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காருக்கான சாலை வரியும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1.42 கோடி வசூலித்தனர். செலுத்தத் தவறினால் கார் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில் வாகன வரி குறைவாக இருப்பதால், அந்த மாநிலத்தில் பதிவு செய்த பிறகு கர்நாடகாவில் ஓட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.