விழுப்புரம் மாவட்டம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஒரு இளைஞர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர்.

இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், இரவு நேரத்தில் அதிகளவில் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார்.

அதன் பின், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட நூடுல்ஸ் செரிமானம் ஆகாமல், ஏற்கனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளுடன் சேர்ந்து அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஷவர்மா மற்றும் சிக்கன் உணவுகள் காரணமாகவும் பலர் உயிரிழப்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் தொடர்கின்றன.

மருத்துவர்கள் அறிவுறுத்துவதுபோல், வயிற்று பாதிப்பு இருந்தால் அரிசிக் கஞ்சி, மோர் சாதம் போன்ற எளிமையான உணவுகளே உண்ணவேண்டும்.

அதற்குப் பதிலாக எண்ணெய் மற்றும் மசாலா அதிகமுள்ள உணவுகள் உண்ணுவது, உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர்.