சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார் தற்காலிக காவலாளியாக மடப்புரத்தில் உள்ள கோவிலில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரின் தாய் மாலதி தென்னை ஓலை முனையும் வேலை செய்து வருகிறார். சகோதரர் ஐடிஐ எலக்ட்ரிக்கல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தானில் வசித்து வந்த நிலையில் அஜித்குமாரின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் மடப்புரத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இவருடைய தாய் தனது 2 மகன்களையும் தனிமையில் வளர்த்து வந்தார். அஜித் குமாருக்கு திருமணம் ஆகாத நிலையில், கோவிலில் காவலாளி பணிக்கு ஆளில்லாததை கேள்விப்பட்டு ரூ. 10000 சம்பளத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கோவிலுக்கு வந்த பெண்ணின் நகை காணாமல் போனதால் அஜித்குமார் மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அஜித்குமார் 5 காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

அதோடு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு திருப்புவனம் சண்டே திடலில் அஜித்குமாரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள். மேலும் அஜித் குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.