ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் பகுதியை சேர்ந்தவர் விஷால் பரத்வாஜ் (25). இவர் ஜம்மு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

கடந்த ஜூன் 17ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் இருந்த பால்கனியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷாலை ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில், கடந்த சில நாட்களாக விஷால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வாந்தி எடுப்பதற்காக வெளியே சென்ற அவர் பால்கனியில் கால் தவறி கீழே விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அவருடன் படிக்கும் சக மாணவர்கள் கூறியதாவது, விஷால் விழுந்த உடனே விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிபிஆர் மூலம் அவருக்கு முதலுதவி செய்ய முயற்சித்தார். இருந்தும் விஷாலை காப்பாற்ற முடியவில்லை எனக் கூறியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழகம் மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்திற்கு வெளியே கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது மாணவரை அழைத்துச் செல்ல பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் 20-25 நிமிடங்கள் மிக தாமதமாக வந்ததாகவும், அதனால் அவரை தனியார் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமானதால் அவரது உயிர் பறிபோனதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும் பல்கலைக்கழகத் தரப்பில் சம்பவம் நடந்த 9 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் விஷாலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.