
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் மாவட்டம் டாண்டாவைச் சேர்ந்த முகமது நவீத், ஷேன் ஆலம், முதவல்லி, ஜாஹித் மற்றும் சுல்பிகர் உள்ளிட்ட ஆறு பேர் சவுதியில் நான்கு ஆண்டுகளாக வேலை செய்து, நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் சீருடையில் வந்த கும்பல் காரில் கடத்தி பண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றது.
இந்த சம்பவம் மூந்தா பாண்டே பகுதியில் நடந்துள்ளது. கடத்தப்பட்டவர்களிடம் தங்கம் இருந்ததாக சந்தேகித்து, கும்பல் அவர்களிடம் தங்கத்தை ஒப்படைக்க வற்புறுத்தியது. மறுத்தவுடன், வயிற்றைக் கிழித்துவிடுவோம் என மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒரு இளைஞர் தப்பியோடி சத்தமிட்டதால், அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து குற்றவாளிகளை முற்றுகையிட்டனர்.
ஏற்பட்ட மோதலில், இருவர் போலீசாரால் சுடப்பட்டு காயமடைந்தனர், பின்னர் தௌஃபிக் மற்றும் ராஜா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மொத்தமாக, இந்தக் குற்றத்தில் பலர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மற்ற கூட்டாளிகளின் பெயர்களை தெரிவித்துள்ளனர். ஆனால், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகள் பயன்படுத்திய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மொராதாபாத் எஸ்பி சிட்டி ரன்விஜய் சிங் தெரிவித்ததாவது: “இது திட்டமிட்ட குற்றமாகும். தப்பியோடியவர்கள் விரைவில் பிடிபடுவர். பாதிக்கப்பட்ட ஆறு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விரைவில் விசாரிக்கபட்டு, அவர்கள் மீது கடும் தண்டனை உறுதி செய்யப்படும்” என்றார்.