தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியுள்ளேன்.

அதேபோன்று சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் மற்றும் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்களுக்கான திட்டங்களுக்கான நிதியை விடுவிக்குமாறும் கூறியுள்ளேன். அதன் பிறகு தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி தொடர்பாகவும் கோரிக்கை விடுத்துள்ளேன். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன். நான் எப்போது டெல்லிக்கு சென்றாலும் மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திப்பது வழக்கம் என்பதால் அதே போன்றுதான் தற்போதும் சந்தித்தேன்.

மேலும் என்னிடம் வெள்ளை குடையும் கிடையாது எடப்பாடி பழனிச்சாமிடம் இருப்பது போன்று காவி கொடியும் கிடையாது என்றும் கூறினார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி ரெய்டுக்கு பயந்து தான் வெள்ளை கொடி ஏந்திக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்கிறார் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.