உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது டிஜே பாடல் ஒலிக்க உறவினர்கள் நடனமாடிய படி திருமண ஜோடிகள் குதிரை வண்டியில் அமர்ந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த 25 இளைஞர்கள் திருமண ஊர்வலத்தை நிறுத்த சொல்லியதாக கூறிய நிலையில் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட குழந்தைகள், பெண்மணிகள் ஆகியோரை கட்டைகளாலும், கம்பிகளாலும் தாக்கிய நிலையில் மணமகனை குதிரை வண்டியில் இருந்து கீழே இறக்கி அவரை அடித்தனர். இனிமேல் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று மிரட்டினர். அந்த நேரத்தில் காவல்துறையினர் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

அதன் பின் காவல்துறையினரின் பாதுகாப்பில் திருமண ஊர்வலம் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய அதே கும்பல் மறுநாள் மணமகளின் வீட்டிற்கு வந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் தலித் பாதுகாப்பு “பீம் ஆர்மி” சம்பவ இடத்திற்கு வந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

பின்னர் தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜாட் சமூகத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அடையாளம் தெரியாத 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய முக்கிய நபர்களை தேடி வரும் நிலையில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.