
தமிழக ஐஆர்எஸ் அதிகாரியும் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராகவும் பதவி வகித்தி வந்த கேஜி அருண் ராஜ் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதற்காக தான் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் 12 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜயும் கட்சி பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வரும் நிலையில் புதிய சின்னத்தை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவேன் என கூறி வரும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் முதல் முறையாக விஜய் தேர்தல் களத்தில் களம் காண்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் விருப்ப ஓய்வு அறிவித்துள்ளதால் இனி அவர்தான் தவெகவில் எல்லாம் எனக் கூறப்படுகிறது. இவர்தான் இதுவரையில் நடிகர் விஜய்க்கு அரசியல் தொடர்பான அறிவுரைகளை வழங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜய்க்கு அரசியல் உத்திகள் குறித்து வியூகம் வகுக்கும் ஜான் ஆரோக்கிய சாமியை அறிமுகம் செய்து வைத்ததும் இந்த அதிகாரி தான் என்று கூறப்படுகிறது. இந்த அதிகாரி முதலில் டாக்டராக இருந்த நிலையில் பின்னர் ஐஆர்எஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமானவரித்துறை கூடுதல் ஆணையராக பதவியில் அமர்ந்தார்.
இவரை கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மத்திய நேரடி வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு பணியிடை மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக கூறப்படும் நிலையில் அவருக்கு கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.