மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் தங்கபாண்டியும் அவரது நண்பருமான காட்டுப்பூச்சி என்கிற ஆனந்த் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது தம்பி இருவரும் சேர்ந்து தங்கபாண்டியின் பைக்கை எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த பிரதாப் முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு அவர்,அவரது தம்பி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பழ மார்க்கெட்டிற்கு தங்கப்பாண்டியை தேடி சென்றனர்.

அப்போது அங்கு வைத்து தங்கப்பாண்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது பிரதாபின் காதலியான சிவப்பிரியா(18) மற்றும் பிரதாப்பின் நண்பர்களான சகாயம்(18), அவனேந்திரன்(18) மற்றும் பிரதாப்பின் தம்பியும் ஆகியோர்கள் தங்கப்பாண்டி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது.

எனவே சிவப்பிரியா, சகாயம் மற்றும் அவனேந்திரன் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.