கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் பகுதியில் சேர்ந்தவர் ஷிவு. இவர் மீது குறைந்தது 11 வழக்குகளுக்கு மேல் உள்ளது. இவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பிரபல கொள்ளையன். சமீபத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பைதரஹள்ளி பகுதியில் ஷிவு மற்றும் அவரது கூட்டாளிகள் அனில் மற்றும் விவேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் சமீபத்தில் ஒரு நகரில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.

இதனை அடுத்து 3 பேரிடமிருந்து சுமார் 260 கிராம் தங்கத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கத்தில் ஒரு பகுதியை தமிழ்நாட்டில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அதன் பின் நடத்திய தொடர் விசாரணையில் ஷிவு கூறியதாவது, தனது வாழ்க்கை முறை தனக்கு மிகவும் அவமானத்தையும், சுமையும் ஏற்படுத்துவதால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.

இருப்பினும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கூட்டாளிகளுடன் இணைந்து தொடர்ந்து 3 வீடுகளில் கொள்ளையடித்து தனது பகுதியில் உள்ள குடும்பங்களில் உள்ள ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்காக செலவிட்டேன். இதன் மூலம் என் வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கம் கிடைத்தது.

சட்டத்தை மீறுவதாக இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பிறருக்கு உதவ முடிவு செய்தேன். பிரபல கொள்ளையர் ராபின் குட் பாணியில் திருடிய நகைகளை விற்று  ரூபாய் 14 லட்சம் வரை இதுவரை மாணவர்களின் கட்டணத்தை செலவிட பயன்படுத்தி உள்ளேன். மீதமுள்ள பணத்தில் எனது கூட்டாளிகளுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளேன் என ஷிவு கூறினார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, ஷிவு கல்விச் செலவுக்காகவும், நண்பர்களுக்கு வாகனங்கள் வாங்க பயன்படுத்தியதாகவும் கூறிய 14 லட்சம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்று திருடர்கள் அசாதாரணமான கதைகளை கூறுவதை பலமுறை பார்த்துள்ளோம்.

அவர்கள் உண்மைதான் சொல்கிறார்களா ? அல்லது அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்களா? என்பது குறித்த உண்மை விசாரணையில் வெளிவரும். மேலும் அவர் எந்த நோக்கத்தில் திருடி இருந்தாலும் குற்றம் செய்துள்ளனர். அவர் கூறுவது உண்மையா என்பதை தற்போது விசாரித்து வருகிறோம் எனக் கூறியுள்ளனர்.