மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிக்கான பாம்பு கடி மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரே நபருக்கு பாம்பு 38 முறை கடித்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சம் வீதம் அரசாங்க இழப்பீடு தொகை பெற்றதாக தெரிய வந்துள்ளது. மொத்தமாக, ரூ.1 கோடியே 52 லட்சம் வரை அரசு நிதி மோசடி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி வெளியிட்டு, “ஒரே மாவட்டத்தில் மட்டும் பாம்பு கடி பேரில் ரூ.11 கோடி மதிப்பிலான அரசாங்க நிதி திருடப்பட்டுள்ளது. மற்ற 54 மாவட்டங்களில் என்ன நடந்திருக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இந்த ஊழல் அரசின் அலட்சியத்தையும், அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் காட்டுவதாக அவர் கூறினார்.

இந்த மோசடியில் ரமேஷ் என்ற நபர் பெயரில் 30 முறை மற்றும் ராம்குமார் என்ற பெயரில் 19 முறை பாம்பு கடி மரணம் என தெரிவிக்கப்பட்டு, அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்றதாக தகவல். இந்த வழக்கு 2019-இல் கமல்நாத் அரசு காலத்தில் தொடங்கி, சிவராஜ் சிங் சௌஹான் அரசுக்கும் நீண்டுவந்துள்ளது.

விசாரணையில் முன்னாள் எஸ்.டி.எம் அமித் சிங், ஐந்து தாசில்தார்கள் உள்ளிட்டோர் மீது சந்தேகங்கள் நிலவுகிறது. ஆனால் இதுவரை ஒரே ஒரு உதவி செயலாளர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.