தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ மாணவிகளுக்கு டிப்ளமோ படிப்பின் மீது ஆர்வம் குறைந்து வருவதால் மாணவ சேர்க்கைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் ஒன்றரை லட்சம் இடங்களில் 58 ஆயிரத்து 426 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 91 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருந்தது. இதனால் சில தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கைகளை எடுக்காமல் ஏற்கனவே படிக்கும் மாணவர்களின் படிப்பு முடிவடையும் வரை கல்லூரிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சில கல்லூரிகள் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு கல்லூரிகளுக்கு மாற்றி வருகின்றனர். மேலும் டிப்ளமோ படிப்பின் மீதான மாணவர்களின் பங்கேற்பு குறைந்து வருவதால் 2024 2025 ஆம் கல்வியாண்டில் கிட்டத்தட்ட 17 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.