
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீசானம் கடக்கால் புதூரை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு சாய் கிரிஷ் (2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் ஜெர்மன் மொழி கற்றுக் கொள்வதற்காக சென்னையில் வசித்து வந்துள்ளனர். மேலும் அருண்குமார் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
எனவே அவர்களது மகன் சாய் கிரிஷை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது பாட்டி சாந்தி (49) வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தனது மகனைப் பார்ப்பதற்காக அருண்குமாரும், காயத்ரியும் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள மாமியார் சாந்தி வீட்டிற்கு வந்துள்ளனர்.
அங்கு தரையில் படுத்திருந்த குழந்தை சாய் கிரிஷ் மீது பாட்டி சாந்தி மயங்கிய நிலையில் குப்புற விழுந்து கிடந்துள்ளார். இதனைக் பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும், உடனே இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை சாய் கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல அவரது பாட்டி சாந்தியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பாட்டி, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.