தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சிறுவர், சிறுமியர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

அதில் திருக்குறளை ஒப்புவித்த மாணவ, மாணவிகள் யோகா மற்றும் நடன நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். கலிய பகுதியை சேர்ந்த வி வி ஸ்போர்ட்ஸ் குழு மாணவ மாணவிகள் கராத்தே மற்றும் வாள்பயிற்சி செய்து அசத்தினர். இதைத்தொடர்ந்து பம்பரம், கேலி, சிலம்பம் போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவர் சிறுமியர்கள் விளையாடி மகிழ்ந்தனர். அதன்பின் அங்கிருந்த நூல் நிலையத்திற்கு மாணவிகள் சென்று புத்தகங்களை படித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் இயற்கையான குளிர்பானம் மற்றும் கடலை மிட்டாய் கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்டது. அதோடு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய சாப்பாடு வழங்கப்பட்டது. மேலும் இந்த கோடை கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவதும் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் என்பவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.