நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு பிரதிபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை லிவிங்ஸ்டன் நேற்று காலை வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு தண்ணீர் வாளியில் குழந்தை தலைகுப்புற விழுந்து தத்தளித்த நிலையில் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.