
திருமணமாகி 43 நாட்களிலேயே கணவர் சித்திரவதை செய்ததால், ஒரு பெண் நீதிமன்றத்தை நாடிய வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது. சென்னையைச் சேர்ந்த வாலிபர் தனது மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதேபோல் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன் வாலிபர் தனது பணி குறித்து தவறான தகவலை கூறியுள்ளார். மேலும் குடித்து வந்து வலுக்கட்டாயமாக உடலுறவு, ஆபாச படங்களை பார்க்க செய்தல், 30 பவுன் தங்க நகை பைக் கொடுத்தும் மேலும் வரதட்சனை கேட்டு நெருக்கடி கொடுப்பது என இளம்பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
மேலும் வாலிபரின் குடும்பத்தினரும் இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு திருமணமான 43 நாட்களிலேயே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண் தனது உடல் மற்றும் மன உளைச்சல் குறித்து அனைத்து விவரங்களையும் முறையாக விளக்கினார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி இளம் பெண்ணின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு வாலிபர் அவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.