உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள கஹ்மர் கிராமம், தேசிய பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைக்கும் வீரர்களின் பூர்வீகமாக பரிச்சயமானது. இக்கிராமத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவத்தில் சேவை செய்துள்ளனர்.

இவர்களில் சுமார் 5,000 பேர் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது 10,000-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் இருந்து ஜவான்களாகவும், லெப்டினன்ட், பிரிகேடியர், கர்னல் என உயர் பதவிகளிலும் சேவை செய்கின்றனர். இவ்வளவு பெரிய அளவில் ராணுவ பங்களிப்பு உள்ளதால், கஹ்மர் கிராமம் “சிப்பாய்களின் கிராமம்” என அழைக்கப்படுகிறது.

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடிலும் ஒரு ராணுவ வீரர் இருப்பது வழக்கமாகவே உள்ளது. வீடுகளின் வாசல்களில் ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கஹ்மர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்போது ஜம்மு & காஷ்மீர் எல்லைப் பகுதி போன்ற முக்கிய பாதுகாப்பு மையங்களில் பணியாற்றி வருகின்றனர்.

காகில்போர், 1971 இந்திய-பாக் போர் உள்ளிட்ட முக்கிய போர்களில் கஹ்மர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 90 வயதான 1971 போர் வீரர் பன்சிதர் சிங், “இந்த அரசு அனுமதி அளித்தால் இன்னும் எல்லைக்கு சென்று பணியாற்ற தயார்” என பெருமையுடன் கூறுகிறார்.

இந்த கிராமத்தில் பல தலைமுறைகளாக நாட்டுக்காக சேவை செய்யும் பண்பு நிலவுகிறது. பாட்டனார் விவசாயம் செய்ய, பேரன்கள் எல்லையில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். கிராமத்தில் பிள்ளைகளுக்காக ராணுவ பயிற்சி மையம் “மதியா” எனப்படும் பயிற்சி வளாகத்தில் செயல்படுகிறது. ஓய்வுபெற்ற வீரர்களால் வடிவமைக்கப்பட்ட அந்த பயிற்சி மையத்தில் ராணுவ தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடைபெறுகின்றன.

பாய்ச்சல் குழி, ரன்னிங் டிராக், மோன்கி ரோப் என அனைத்தும் ராணுவ அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற வீரர்கள் ஆரம்பித்துள்ள ரஃபேல் அகாடமி எனும் நிறுவனம், ராணுவ பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கோச்சிங் வழங்குகிறது.