அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக் பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது மோதி பின்னர் பாலத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் மானவ் பட்டேல், சவுரவ் பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காரில் இருந்த இன்னொரு நபர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில் இந்திய மாணவர்கள் 2 பேர் கிளீவ் லேண்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கவலையான நேரத்தில் அவர்களுடைய குடும்பத்தினருக்கு நாங்கள் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம் என்றும், தொடர்ந்து  அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.