திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிந்தியா கடந்த 9 ம் தேதி தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் சிந்தியாவை கழுத்தை நெரித்து தாக்கி அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றனர்.

பின்னர் இது குறித்து சிந்தியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சிந்தியாவை தாக்கி 7 பவுன் தங்கச் சங்கலியை பறித்து சென்றது அவருடைய மருமகள் அருட்செல்வி (40), பேரன் அருண்குமார் (19),மற்றும் அருட்செல்வியின் தந்தை அய்யாதுரை (65) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.