மலேசியாவின் பெராக் மாநிலம் கெரிக் அருகே உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு வேதனைக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குட்டி யானை சாலையை கடக்கும்போது வேகமாக வந்த லாரி மோதி அதை கொன்றது.

இதனை பார்த்த தாய் யானை காட்டிலிருந்து ஓடி வந்து தன் குழந்தையை காப்பாற்ற முயன்றது. ஆனால், குட்டி யானை ஏற்கனவே உயிரிழந்தது. இந்தக் காட்சிகள் பதிவுசெய்யப்பட்ட 1 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, உலகம் முழுவதும் பார்வையாளர்களை கலங்க வைத்தது.

 

தன் குட்டியைக் காப்பாற்ற நினைத்து அந்த தாய் யானை, பெரும் சோகத்தில் அந்த லாரியை தள்ள முயற்சி செய்தது. மக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானையை அங்கிருந்து அனுப்ப முயன்றாலும், அது விடாமல் சாலை ஓரத்தில் தன் குட்டியைப் பாசத்துடன் பாதுகாத்து நின்றது.

வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதற்கேற்ப, தாயானை அங்கிருந்து விலக மறுத்து, வண்டி அருகே நீண்ட நேரம் வரை தங்கியிருந்தது. காலை வரை அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ‘மதர்ஸ் டே’ அன்று வெளிவந்தது என்பதால், இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

“எந்தத் தாயும் இப்படி துன்பப்பட கூடாது”, “இதைக் கண்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது” என நெட்டிசன்கள் தங்களது உணர்வுகளை பதிவு செய்தனர். யானையின் உணர்வும் தாய்மை பாசமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வலிமை பெற்றதாக பலரும் தெரிவித்தனர். இந்த வீடியோ தாயின் அன்பு எல்லை கடந்தது என்பதற்கான ஒரு உணர்ச்சிகரமான சான்றாகத் திகழ்கிறது.