
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த போர் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின்படி நிறுத்தப்பட்டு இருப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். உலக அளவில் மற்ற நாடுகள் போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவற்றுக்கெல்லாம் செவிசாய்க்காமல் இரண்டு நாடுகளும் போரை தீவிர படுத்தினர்.
இதனால் ராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரு நாடுகளும் சொன்னபோதிலும் இரண்டு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போர் நிறுத்தம் அமெரிக்காவின் சமரசம் மூலமாகவோ அல்லது இரு நாடுகளின் சுயமான முடிவோ எதுவாயினும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.
அந்த முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது. அந்தப் போரினால் உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்தோர்களுக்கு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் குண்டு வீச்சில் சிதைந்த கட்டுமானங்களை சரி செய்வதற்கு மாநில அரசு நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும்.
அத்துடன் மிக முக்கியமாக கருத்துரிமை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் அதனால் பொதுமக்களுக்கு எந்தவித பயமும் இல்லை .
எனவே போர் மீண்டும் வெடித்து விடாமல் பார்த்துக் கொள்வதோடு, பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டும் அதற்கு உலக அளவில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.