திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும் என ஆசை வார்த்தை கூறி அந்த தொழிலதிபரை ஒரு வாட்ஸ்அப் குழுவிலும் இணைத்துள்ளார்.

அதன் பின் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்கலாம் என விவரங்களை எல்லாம் பகிர்ந்து தொழிலதிபரை நம்ப வைத்துள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் அந்த தொழிலதிபர் அந்த உறுப்பினர் கொடுத்த லிங்குகளை ஓபன் செய்து தனக்கான ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை உருவாக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் படி வங்கி கணக்கிற்கு 17 முறை தவணைகளாக ரூபாய் 90 லட்சம் பரிமாற்றமும் செய்துள்ளார். இந்நிலையில் முதலீடு செய்த லாபத்தை எடுக்க வேண்டும் என தொழிலதிபர் கூறியுள்ளார். ஆனால் 3% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு தொழிலதிபர் மறுத்து தன்னுடைய லாபத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் கூடுதலாக ரூபாய் 60 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியதால் தான் ஏமாற்றபட்டதை அறிந்த தொழிலதிபர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.