செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான உதயா அப்பு (24) மற்றும் திவாகர் (23) ஆகியோருடன் கடந்த சில நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு, மூவரும்  கிராமத்தின் ஓரமுள்ள ஒரு தனிமையான இடத்தில் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது, லோகேஷுக்கு அதிக அளவில் மதுவை ஊற்றி கொடுத்து, இருவரும் திட்டமிட்டபடி இரும்புக் கம்பியால் அவரை தாக்கியுள்ளனர்.

இதில், லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மதுராந்தகம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், உதயா அப்பும் திவாகரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவர்களை தேடி வலை வீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.