காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது.

இதில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மத தலங்களை குறிவைத்து தாக்கியதாகவும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் கூறியது.

இந்நிலையில் இன்று மீண்டும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாகிஸ்தான் அத்துமீறி எல்லைப் பகுதிகளில் நடந்த டிரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

அதன்பிறகு இந்தியா தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து அழித்ததாகவும் மதத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய் என்று கூறினார்கள். இது பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, இந்தியா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. எதிர்வினை மட்டுமே ஆற்றியுள்ளோம்.

பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் இல்லை என அந்த நாட்டு அமைச்சர் கூறும் நிலையில் அவர்கள் கை நழுவ முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தானில் தான் தீவிரவாதிகள் அமைப்புகள் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும் இருக்கிறது.

உலக நாடுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களிலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு பங்கு உண்டு. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் பொய் சொல்கிறது என்று கூறினார்.