
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் வசித்து வரும் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளை சுற்றி வசிக்கும் அமெரிக்க மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவி வருவதால் அமெரிக்க மக்கள் யாரும் எல்லை பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகம் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை தாக்குதல் நடத்தும் பகுதிகளை விட்டு அமெரிக்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது.