காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக தமிழகத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்றவில்லை என்றால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியிருந்தார்.

இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழ்நாடு என்பது இனம் மதம் மொழி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போதும் தீவிரவாதத்திற்கு துணை போக மாட்டார். அவர் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் சிலர் விஷ கருத்துகளை பரப்ப முயற்சிக்கும் நிலையில் அது ஒருபோதும் நடக்காது. இங்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சகோதர சகோதரிகளாக பழகி வரும் நிலையில் அவர்களை மதம் மற்றும் மொழியால் பிளவு படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் நினைக்கிறார். ஆனால் அவருக்கு குளிர் ஜுரம் தான் வரும். மற்றபடி வேறு எதுவும் நடக்காது என்று கூறியுள்ளார்.