
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் துர்பத் மாவட்டம், டன்னுக் பகுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு நடைபெற்ற திடீர் மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்ததாக பலூச் கிளர்ச்சி படை (BLA) தெரிவித்துள்ளது. இந்த மோதல் அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி சூரிய உதயமாகும் வரை நீடித்ததாகவும், மூன்று மணிநேரம் கிளர்ச்சிபடையினர் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் பி.எல்.ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச் தெரிவித்தார்.
இந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனங்களை BLA கிளர்ச்சியாளர்கள் நேரடியாக குறிவைத்து தாக்கினர். இதில் பலர் காயமடைந்ததாகவும், பலுசிஸ்தானை முழுமையாக கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பி.எல்.ஏ தரப்பில் சங்கத் நபீல், நூத் பண்டாக், மற்றும் குரு என்ற முஹம்மது உமர் ஜகா ஆகிய மூன்று கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன், ஏப்ரல் 8ஆம் தேதி பலுசிஸ்தானின் துக்கி மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெறும் இந்தத் தாக்குதல்களால் பலுசிஸ்தானில் நிலவும் உள்நாட்டு பதட்ட நிலைமை மேலும் தீவிரமாகி வருகிறது. தொடர்ந்து உயரும் கிளர்ச்சி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் பலுச்சிஸ்தான் கிளர்ச்சி படையினர் பாகிஸ்தானின் முக்கிய இடங்களையும் ராணுவ முகாம்களையும் கைப்பற்றியதாக முன்பு வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.