
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த கிராம மக்கள் வீட்டின் அருகில் சென்றனர் . அப்போது அங்கிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் கிடந்ததும், அருகில் ருக்மணி பாய் கொலை செய்யப்பட்டு கை வெளியே தெரியும்படி புதைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
பின்னர் கிராம மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அழுகிய நிலையில் இருந்த ருக்மணி பாயின் உடல் மற்றும் லட்சுமணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் லட்சுமணன் தனது மனைவியை கொலை செய்து விட்டு அவரது உடலை வீட்டில் புதைக்க முயற்சி செய்ததாகவும், அதன் பின் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.