
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுபரமக்குடி பகுதியில் நாகசுப்பிரமணியன் என்ற 75 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு தனலட்சுமி (70) என்ற மனைவி இருந்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் உள்ள வீட்டில் வயதான தம்பதி மட்டும் தான் தனியாக வசித்து வந்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி இவர்களின் மகள் புவனேஸ்வரி செல்போனில் பேசிய நிலையில் அதன் பிறகு 3 நாட்களாக அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி சந்தேகம் அடைந்து நேரடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது பெற்றோர் கதவை திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது நாகசுப்பிரமணியன் மற்றும் அவருடைய மனைவி பிணமாக கிடந்துள்ளனர். அவர்களுடைய சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்தது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் தற்கொலை செய்து கொண்ட உயிரிழந்தார்களா? அல்லது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.