தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. இவருக்கு கீர்த்தி (30) என்ற மனைவி இருந்துள்ளார். அந்த தம்பதியினருக்கு மகேஸ்வரி, காயத்ரி என்ற இரு மகள்கள் மற்றும் பத்ரி என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் மாருதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டிற்கு செலவு செய்யாமல்  தனது காதலிக்கு தொடர்ந்து செலவு செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த கீர்த்தி அடிக்கடி மாருதியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கள்ள காதலை கைவிடக் கோரி கீர்த்தி ஊர் பெரியவர்களை கூட்டி பஞ்சாயத்து வைத்துள்ளார்.

பஞ்சாயத்தில் மாருதி கள்ளக்காதலை விட்டு தனது குடும்பத்தை கவனிப்பதாக உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து சென்ற வாரம் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கீர்த்தியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கீர்த்தியின் தாய், தந்தையர் வேலைக்கு சென்ற பின் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கீர்த்தி தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்று மாருதி நடுத்தெருவில் கீர்த்தியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கீர்த்தியின் அலறல்  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட மாருதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் கீர்த்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாருதி மீது வழக்குப்பதிவு செய்து தலை மறைவான அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.